9 இடங்களில் இயங்கிய போலி வங்கி; முக்கிய நிர்வாகி கைது!
Editor Zhagaram
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று வங்கி இயங்கி வருகிறதா என்பது குறித்து மும்பையில் விசாரணை மேற்கொண்டதில் குறிப்பிட்ட வங்கி, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் இயங்கி வருவது தெரியவந்தது.
ஈரோடு, சோலார் பகுதியில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் பணம் கட்டினால் வேலை கிடைக்கும் எனக் கூறியதை நம்பி, நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் பணம் கட்டியிருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த வங்கியின் முக்கிய ஊழியர், வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியபோதுதான் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி அந்த வங்கி செயல்பட்டு வருவதும், வங்கியின் தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருவதும், இதன் கிளைகள் மதுரை, விருதாச்சலம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் இயங்கி வருவதும் தெரியவந்தது.
விவகாரம் பெரியதாக இருக்கவே, சென்னை குற்றப்பிரிவு காவல்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி இயங்கி வரும் வங்கிகள் குறித்து மும்பை ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த ரிசர்வ் வங்கி இயக்குநர் அளித்த புகாரின்பேரில், சென்னை குற்றவியல் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் இந்த வங்கியை நடத்தி வருவதும், இந்த வங்கியின் கிளைகளை தமிழகத்தின் பிற பகுதிகளான மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 9 இடங்களில் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, சந்திரபோஸை போலீஸார் கைதுசெய்திருக்கும் நிலையில், இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். “ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி மாநிலம் முழுவதும் 9 இடங்களில் இந்த வங்கியின் கிளைகளை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இந்த வங்கிகளில் 3,000 வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி வரவு-செலவு செய்து வந்திருக்கின்றனர். வங்கியிலிருந்து ரூ.56 லட்சம் தொகை இருப்பில் இருப்பது கண்டறியப்பட்டு, அந்தத் தொகை முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இந்த வங்கிகளை நம்பி அதிக அளவிலான மக்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் வங்கியில் தொகையை டெபாசிட் செய்தால் விவசாயக் கடன் வழங்கப்படும் என்ற கவர்ச்சியான வாக்குறுதியை நம்பி விவசாயிகள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களையும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களையும் சென்னை குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்திருக்கின்றனர். அதன்படி ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தில் 9 இடங்களிலும் இயங்கி வந்த போலி வங்கிகளின் அனைத்து ஆவணங்களையும் சேகரித்திருக்கும் சென்னை குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சோலாரில் இயங்கி வந்த போலி வங்கியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றனவா என்று ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோமதியிடம் கேட்டபோது, “சென்னை குற்றப்பிரிவு காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான மற்ற எந்த விவரமும் எனக்குத் தெரியாது” என்று கூறினார்.