ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சு என்பதுதான் திமுகவின் திராவிட மாடல், என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 9 மாவட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். எல்லா வரியையும் உயர்த்திய ஒரே அரசு திமுக தான். அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து திமுக நடுங்கிக் கொண்டு இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.
கரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலின் இரக்கம் இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலிலதா 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தார். ஆனால் தற்போது 12 முதல் 52 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதியைக் கொடுத்தா திமுக ஆட்சிக்கு வந்தது? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. இதுதான் திமுகவின் நிலை. இதுதான் திமுகவின் திராவிட மாடல்” இவ்வாறு அவர் பேசினார்.