Site icon ழகரம்

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க இரண்டுநாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் வருகை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பினனர், நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

பிரதமரை சந்திக்காத இபிஎஸ்: முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார். அந்த பயணத்தின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரியதாகவும், அனுமதி கிடைக்காததால், தனது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தமிழகம் திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

இன்று சந்திப்பா? டெல்லியில் பிரதமரை சந்திக்க முடியாத நிலையில், பிரதமர் மோடியை இன்று சந்திக்க இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒற்றைத் தலைமை பிரச்சினையைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால், பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கிறாரா? அல்லது ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்கிறாரா? அல்லது ஓபிஎஸ் இபிஎஸ் இருவரையும் ஒன்றாக சந்திக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு: பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினை சற்றே ஓய்ந்து, இரண்டு அணிகளும் மாறிமாறி நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கைகளிலும், வார்த்தைப் போர்களிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக சார்பில் பிரதமரை சந்திப்பது யார் என்ற கேள்வி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version