
போர் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், உக்ரைனில் உள்ள தமிழக மருத்துவ மாணவர்களை பத்திரமாக அழைத்து வருவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை, எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது உக்ரைனில் உள்ள மாணவர்கள் சிலரிடம் அவரே தொலைபேசியில் பேசி தைரியம் அளித்தார்.
உக்ரைன் மீது ரஷியா இன்று மூன்றாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் இருந்து யாரும் வெளியேற முடியாத அளவுக்கு ரஷியா அனைத்து விமான நிலையங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அனைத்து நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், உக்ரைனில் உள்ளவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் உக்ரைனில், இந்தியாவை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில், இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய வெளியுறவு துறை அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்களை அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள் உணவு, உறக்கம் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தமிழகத்தில் உள்ள தங்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள். தங்கள் குழந்தைகளை மீட்க வேண்டும் என்று பெற்றோர்களும் தாங்கள் வசிக்கும் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். உக்ரைனில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு நிலை, அவர்களுக்கு தேவைப்படும் உதவி மற்றும் அவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரசை நியமித்து கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.
அதன்படி, உக்ரைனில் உள்ள மாணவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும், அவர்கள் தமிழக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, கட்டுப்பாட்டு அறைக்கு உதவி கேட்டு 1300 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பேசியுள்ளனர். மீதமுள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரசிடம், உக்ரைனில் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் முழு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டு அறிந்தார். இதைத்தொடர்ந்து, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் 3 பேருடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பேசினார். அப்போது, “தாங்கள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்கவும். தங்களை மீட்டு தாயகம் அழைத்து வர ஒன்றிய அரசுடன் தமிழக அரசு தொடர்ந்து பேசி வருகிறது. பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் தமிழக அரசு செய்து தரும்” என்று உறுதி அளித்தார். முதல்வருடன் பேசிய மருத்துவ மாணவர்களும், தாங்கள் பத்திரமாக இருந்தாலும், தொடர்ந்து அச்சத்துடனே இருந்து வருகிறோம். நாங்கள் இருக்கும் பகுதியை சுற்றி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதனால், விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.