காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்தது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ‘வரும் 7-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ம் தேதி மற்றொரு நிதி மோசடி வழக்கில் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறை முன்னிலையில் ஆஜரான நிலையில், அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.யும், டி.கே.சிவகுமாரின் தம்பியுமான டி.கே.சுரேஷ் கூறுகையில், ”அமலாக்கத் துறை பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவது உறுதியாகிவிட்டது. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை முன்னின்று நடத்துவதாலேயே எனது அண்ணன் சிவகுமாருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையால் ராகுல் யாத்திரையை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது’’ என்று தெரிவித்தார்.