Site icon ழகரம்

கடந்த 15 மாதங்களில் தமிழகத்தில் 131 யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழந்துள்ளன என யானைகள் இறப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2021 ஜன.1முதல் டிச.31 வரை 101 யானைகளும், 2022 ஜன.1 முதல் மார்ச் 15வரை 30 யானைகளும் உயிர்இழந்துள்ளன. இதில், அதிகபட்சமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 20 யானைகள், கோவை வனக்கோட்டத்தில் 18 யானைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் நடைபெற்ற யானைகள் உயிரிழப்பு தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக உயிரியலாளர் பீட்டர் பிரேம்சக்கரவர்த்தி, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக சூழலியலாளர் என்.தரன் ஆகியோர் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, வனத்துறையால் அமைக்கப்பட்ட நால்வர் குழுவிடம் முதல்கட்ட அறிக்கையை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, வனத்துறையினர் கூறியதாவது: இயற்கையான காரணத்தால் 118 யானைகள் இறந்துள்ளன. பெரும்பாலும் வறட்சி நிலவும் காலங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 2021 மே மாதம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் உயிரிழந்த 131 யானைகளில் மின்சாரம் தாக்கி 6 யானைகள், ரயில் மோதி 4 யானைகள், சாலை விபத்தில் ஒரு யானை, நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு போன்ற காரணங்களால் 2 யானைகள் உயிரிழந்துள்ளன. 90 சதவீத யானைகளின் உயிரிழப்புஇயற்கையாக ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு, மின்சாரம் பாய்ச்சுதல், நாட்டு வெடிகுண்டு, வேட்டையாடுதல், ரயில் மோதி விபத்து, சாலை விபத்து போன்ற மனித தலையீடுகளால் 10 சதவீத யானைகள் உயிரிழந்துள்ளன. வயது வாரியாக பிரிக்கும்போது உயிரிழந்த யானைகளில் ஒரு வயதுக்குக்கீழ் இருந்த 16 யானைகளும், ஒன்று முதல் 5 வயது வரை 17 யானைகளும், 5 முதல் 15 வயது வரை 19 யானைகளும், 15 வயதுக்கு மேற்பட்ட 79 யானைகளும் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த இளம் யானைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்தால்தான் எந்த காரணிகள் அவற்றின் இயற்கை மரணத்துக்கு வித்திட்டது என்பது தெரியவரும். தனித்தனியாக அவற்றை ஆய்வு செய்யும்போதுதான் தீர்வுகளை அளிக்க முடியும். சில யானைகளின் உயிரிழப்புக்கு காரணம் தெரியவில்லை. அவற்றின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. உடல் பிரேதப் பரிசோதனை செய்யும் நிலையில் இல்லை.

2021-22-ம் நிதியாண்டில் மனித – விலங்கு மோதலால் உயிரிழந்த 53 பேரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.2.25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கோவை வனக்கோட்டத்தில் 12 மனித – விலங்கு மோதல்கள் நடைபெற்றுள்ளன. வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர்கள் சேதத்துக்காக 2,732 விவசாயிகளுக்கு ரூ.3.13 கோடியும், மனித – விலங்கு மோதலால் காயம்பட்டவர்களுக்கு ரூ.80 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதில், கோவை மண்டலத்தில் மட்டும் 713 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version