Site icon ழகரம்

சிவசேனா யாருக்கு சொந்தம்?- ஆவணங்களை தாக்கல் செய்ய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இருதரப்பினரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர். இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். இந்நிலையில், சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.

பதிலுக்கு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தநிலையில் இருதரப்பினரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு இருதரப்பு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஷிண்டே அணி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், 55 எம்எல்ஏக்களில் 40 பேரும், லோக்சபா எம்பிக்களில் 18 பேரில் 12 பேரும் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version