செய்திகள்இந்தியா

ஹைதராபாத்தில் போதை விருந்தில் பங்கேற்ற நடிகை, பாடகர் உட்பட 144 பேர் பிடிபட்டனர்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற போதை விருந்தில் பங்கேற்ற நடிகை, பாடகர் உட்பட 144 பேர் பிடிபட்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த ஓட்டலில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. போதை விருந்தில் பங்கேற்ற 144 பேரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களில் நடிகை நிஹாரிகாவும் ஒருவர். “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற தமிழ் திரைப்படம் உட்பட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இவர், தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். மேலும் பின்னணி பாடகர் ராகுல், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகன் உட்பட ஏராளமான பிரபலங்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத் போலீஸார் கூறும்போது, “பொறியியல் மாணவர் ஒருவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் தனிப்படை நடத்திய சோதனையில் பலர் சிக்கியுள்ளனர். இதில் 35 பேர் பெண்கள்” என்று தெரிவித்தனர்.

நடிகர் நாகபாபு நேற்று வெளியிட்ட வீடியோவில், “எனது மகள் நிஹாரிகா ஓட்டலில் இருந்தது உண்மை. ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button