செய்திகள்இந்தியா

நுபுர் ஷர்மாவை ஆகஸ்ட் 10வரை கைது செய்ய வேண்டாம் – உச்ச நீதிமன்றம்

நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே விவகாரமாகக் கருதி விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா தாக்க்ல செய்த மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும்வரை நுபுர் சர்மாவை கைது செய்வதை தவிர்க்குமாறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பர்திவாலா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

நுபுரின் மனு மீது நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், “முந்தைய உத்தரவை சிறிய அளவில் சரி செய்கிறோம். நீங்கள் ஒவ்வொரு நீதிமன்றமாக செல்வதை நாங்களும் விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.

மேலும், நுபுர் சர்மாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரும் மனுவுக்கு மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஜூலை 1ஆம் தேதி நடந்த விசாரணையின்போது தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட பாதகமான கருத்துக்களை உத்தரவு பக்கத்தில் இருந்து நீக்கும்படியும் நுபுர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்றம் அத்தகைய விமர்சனங்களுக்கு தெரிவித்த பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் நூபுர் தரப்பில் கூறப்பட்டது.

என்ன சொன்னது நீதிமன்றம்?

ஜூலை 1ஆம் தேதி விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், முகமது நபி குறித்து தொலைக்காட்சியில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவர் மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனுவை ஏற்க முடியாது. மேலும், நுபுர் ஷர்மாவின் கருத்து துரதிருஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளது. நாடு முழுவதும் அது உணர்ச்சிகளை தூண்டியது என்று குறிப்பிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button