தமிழகத்தில் 32 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 20 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 40 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 436 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 498 இடங்கள் காலியாக இருந்தன.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2 மாநகராட்சி வார்டுகள், 2 நகராட்சி வார்டுகள், 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12 இடங்கள் காலியாக இருந்தன. இவற்றுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இதில், 4 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 6 கிராம ஊராட்சித் தலைவர்கள், 292 கிராம ஊராட்சி வார்டுகள், தஞ்சாவூர் மாநகராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப் பட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 26-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல், வழக்கு காரணமாக ரத்து செய் யப்பட்டது. மேலும், 3 கிராம ஊராட்சித் தலைவர்கள், 22 கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள் பதவிகளுக்கும், சிவகங்கைமாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் 8-வது வார்டுக்கும் வேட்புமனுக்கள் பெறப்படாததால், தேர்தல் நடைபெற வில்லை.
மீதமுள்ள 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 16 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 31 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகள், 122 கிராம ஊராட்சி வார்டுகள், ஒரு நகராட்சி வார்டு மற்றும் 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 180 பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. 12-ம் தேதி, 140 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டன.
இதில், மாவட்ட ஊராட்சிகளில் 2 இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 14 இடங்கள், சுயேச்சைகள் 5 இடங்கள், காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றுள்ளன.
மாநகராட்சிகளில் 2 வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஒரு நகராட்சி வார்டில் நடைபெற்ற தேர்தலிலும் திமுகவென்றுள்ளது. 7 பேரூராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 6 இடங்களில் திமுகவும், ஓரிடத்தில் சுயேச்சையும் வென்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.
கட்சி அடிப்படையில் 32 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக 25 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் நேற்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன.