தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாநகராட்சியின் 37ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 15 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து திருநங்கை கங்காவுக்கு திமுகவினர் மட்டுமின்றி, பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
49 வயதான திருநங்கை கங்கா, வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கங்கா அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவியுள்ளார்.