Site icon ழகரம்

டிஜிட்டல் செய்திகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் அனைத்தும் முதலில் பதிவு செய்ய வேண்டும். மசோதா அமலுக்கு வந்த 90 நாட்களுக்குள் அனைத்து டிஜிட்டல் ஊடகங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது டிஜிட்டல் மூலமான செய்திகளுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஊடகம் சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், அச்சு மற்றும் இதழியல் மசோதாவில் டிஜிட்டல் ஊடகத்தையும் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடகத்தை நடத்துவோர் செய்தி பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதம் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வெளியிடும் செய்திகளில் விதிகள் மீறப்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை அல்லது அவற்றின் லைசென்ஸை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரின் தலைமையில் ஒரு குழுவை அமைக்கலாம் என்றும் தெரிகிறது.

மசோதாவுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் தர வேண்டும். இதன்படி டிஜிட்டல் ஊடகங்களும் இனி தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும்.

இதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2019 மூலம் டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது டிஜிட்டல் மூலமாக பரப்பப்படும் எந்த செய்தியும், இன்டர்நெட், கம்ப்யூட்டர் அல்லது மொபைல் நெட்வொர்க் மூலமாக பரப்பப்படும் செய்திகளில் இடம்பெறும் தகவல்கள், வீடியோ காட்சிகள் மற்றும் கிராபிக் காட்சிகள் உள்ளிட்டவை அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பத்திரிகை, இதழியல் பதிவு குறித்து பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு மாற்றாக இப்புதிய மசோதா இருக்கும் எனத் தெரிகிறது.

Exit mobile version