தமிழக ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை பெரியார் நகரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆல்லைன் ரம்மியை ஒழிக்க கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்ததுடன், புதிய சட்டம் இயற்றலாம் எனவும் கூறியிருந்தது. எனினும், அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் அந்த சட்டத்தில் திருத்தம்செய்து மேல்முறையீடு செய்துள்ளோம். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்என்ற மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி உள்ளார். இனிமேல் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் 10 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளன. எந்த மசோதாக்கள் மீதும் காலம் தாழ்த்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாங்கள் ஆளுநருடனோ, குடியரசுத் தலைவருடனோ மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை என்றார்.