ரிலையன்ஸ் குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றபோதிலும் முகேஷ் அம்பானிக்கு பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிலே அதிக லாபத்தை அள்ளித் தருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த லாபத்தில் 72% ஆக இது உள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம். முகேஷ் அம்பானி இப்போது ஆசிய அளவில் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இந்த இடத்தை பிடித்திருந்தார் கவுதம் அதானி. இப்போது அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் அம்பானி.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி கடந்த 2002 இல் காலமான பிறகு முகேஷ் மற்றும் அவரது சகோதரர் அனில் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்தை பிரித்துக் கொண்டனர். இதன் பிறகு முகேஷ் அம்பானியின் வர்த்தகம் பெருகியது. அம்பானியின் சொத்து மதிப்பு சராசரியாக 104.7 பில்லியன் டாலர் ஆகும். அதேசமயம் அனில் அம்பானி கடன்காரர் ஆனார். அவர் கடனை அடைக்க முடியாமல் தவித்தபோது முகேஷ் அம்பானி உதவிய சம்பவமும் நடந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வரும் முகேஷ் அம்பானி அந்த பதவிகளில் தனது குழந்தைகளை அமர்த்தி வருகிறார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தக பிரிவு மகள் இஷா அம்பானி வசம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இரண்டாவது மகன் ஆனந்த் வசம் குடும்பத்தின் பாரம்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் நிர்வாகம் முழுமையாக ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு மற்றும் சில்லறை விற்பனை பிரிவு வழக்கம்போல் அதிகமான லாபம் ஈட்டியுள்ளது. அந்நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 46 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூ.1,61,715 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 72% ஆகும். கடந்த மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈட்டிய ஒவ்வொரு ரூ.10 ரூபாய் லாபத்திலும் ரூ.7 பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய் காலாண்டு அடிப்படையில் 4.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் 26.9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நெட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 9.7 மில்லியனாக உயர்ந்தது.
மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 35.2 மில்லியனாக உயர்ந்து, ஜூன் 30 அன்று 419.9 மில்லியனாக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ சராசரி டேட்டா மற்றும் ஒரு பயனருக்கு ஒரு மாதத்திற்கு குரல் நுகர்வு முறையே 20.8 ஜிபி மற்றும் 1,001 நிமிடங்களாக அதிகரித்துள்ளது. 25.9 பில்லியன் ஜிபி டேட்டா டிராபிக் 27.2 சதவீதம் அதிகரித்துள்ளது; 1.25 டிரில்லியன் நிமிடங்களில் மொத்த குரல் போக்குவரத்து 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுபோலவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய தொழிலான ரீடெய்ல் மொத்த வருவாய் ரூ. 58,554 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ரீடைல் வருவாய் 51.9 சதவீதம் அதிகமாகும். ரிலையன்ஸ் ரீடெய்ல் காலாண்டில் ரூ. 3,837 கோடி ஈட்டியுள்ளது. காலாண்டு அடிப்படையில் கணக்கிட்டால் இது 97.7 சதவீதம் அதிகமாகும்.