Site icon ழகரம்

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை: தமிழக டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், “ஆபரேஷன் கஞ்சா வேட்டை – 2.0” திட்டம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைச் செய்யப்படுவதை காவல்துறையினர் உடனடியாக தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் வசிப்பவர்களைக் கொண்டு வாட்சப் குழுக்களை உருவாக்கி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பான ரகசிய தகவல்களை சேகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா கடத்துபவர்கள், பதுக்குபவர்கள், விற்பனை செய்வோர் மற்றும் இவற்றை மொத்தமாக கொள்முதல் செய்வோர் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

நேற்று தொடங்கிய “ஆபரேஷன் கஞ்சா வேட்டை – 2.0″ திட்டம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version