தமிழகத்தில் 150 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று (ஜூலை 13) கரூர் வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது, ”சர்ச் வருமானத்தை கிறிஸ்தவர்களும், மசூதி வருமானத்தை முஸ்லிம்கள் மத வளர்ச்சிக்காகவும், மத மாற்றத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டால் உடனே வழங்கப்படுகிறது. ஆனால் இந்துக்கள் கட்டிடம் கட்டிவிட்டு அனுமதி கேட்டாலும் வழங்கப்படுவதில்லை. இந்துக்கள் உரிமை பறிக்கப்படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்து மாணவர்களுக்கு இல்லை.
கோயில் நிலங்கள் கோயில் வளர்ச்சிக்கு பயன்படவேண்டும். கோயில் நிலங்களில் குத்தகைக்கு எடுத்துள்ளவர்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கோயில் நிலங்கள் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 4.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் உள்ளது.
50,000 ஏக்கர் நிலம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால், கோயில் நிலங்களை மீட்டுவிட்டதாக அமைச்சர் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார். சில துறைகளில் புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரிகள் ஒரு சில நாட்களுக்கு ஆய்வுகள் நடத்துவார்கள் பேரம் பேசுவதற்காக அதுப்போல தான் இதுவும்.
மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 13 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கிறிஸ்தவ கல்வி நிறுவனம் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த 2 குளங்களும் மூடப்பட்ள்ளன. தமிழகத்தில் 150 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. சர்ச், மசூதிகள் இடிக்கப்படவில்லை. அவை இருக்கும் இடத்தில் சாலைகள் வளைந்து செல்கின்றன. இந்த ஆட்சி இந்து விரோத ஆட்சி.
அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். தமிழகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம்.” இவ்வாறு காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தார்.