‘கடல் வாணிபத்தில் தமிழர்கள் கொடிக்கட்டி பறந்தார்கள்’ என்பதற்கு நினைவுச் சின்னமாக உள்ள அரிக்கமேடு பராமரிப்பின்றி உள்ள சூழலில், மத்திய தொல்லியல் துறை மீண்டும் அங்கே அகழ்வாய்வு செய்ய முடிவு எடுத்துள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு கடல் வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய மன்னன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இப்பகுதியில் இருந்து ரோமானியர்களுடன் வாணிபம் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 1769-ல் நூலாக வெளியிட்டார். 1908-ல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய், அரிக்கமேடுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பல வண்ண மணிகள், மண்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். அதே பகுதியில், அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்தன.
அரிக்கமேடுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் பகுதிகளை ஆராய்ந்து நூல்களும் வெளிநாட்டவரால் வெளியிடப்பட்டன. இவ்விடத்து பெருமையை நாம்தான் பாதுகாக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழர்கள் கடல் வாணிபத்தில் கொடிகட்டி பறந்தார்கள் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் தற்போது திறந்தவெளி மதுக்கூடமாகவே மாறியுள்ளது. மறுபுறமோ மணல் திருட்டு அதிகளவில் நடக்கிறது. வரலாற்று சின்னங்களையும் சிதைத்து மணல் திருட்டுநடக்கிறது. இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கூட சர்வ சாதாரணமாக மணலை திருடி செல்கின்றனர்.
இந்திய தொல்லியல் துறை, தனது கட்டுப்பாட்டுக்குள் அரிக்கமேட்டை கொண்டு வந்தும், அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டன. தற்போது அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு தென்படுகிறது. அகழாய்வு பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி அரசு, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் உட்பட பலர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் அரிக்கமேட்டின் நிலை தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய தொல்லியல் துறை அரிக்கமேட்டினை அகழாய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இங்கு பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.
புதர்மண்டி உள்ள இடங்களை அழிப்பது, சுற்றிலும் பழைய இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு பாதுகாப்பான வளையம் ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ள புதுச்சேரி அரசு, அரிக்கமேட்டில் மண்ணில் புதையுண்டு உள்ள அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை மீண்டும் வெளிக்கொணர்ந்து அங்கேயே அரிக்கமேடு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிடுகின்றனர்.