Site icon ழகரம்

வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு

போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை மட்டும் லண்டனில் 43 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

இதுகுறித்து ‘தி கார்டியன்’ வெளியிட்ட செய்தியில், “போர்ச்சுக்கலில் கடந்த வாரத்தில் மட்டும் 659 பேர் வெப்ப அலைக்கு பலியாகினர். போர்ச்சுக்கல்லின் அண்டை நாடான ஸ்பெயினில் 368 பேர் பலியாகினர். ஜூலை 10-ஆம் தேதி முதல் கடும் வெப்பம் நிலவுவதால் இரு நாடுகளிலும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 38 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 14 தேதி போர்ச்சுகலிலுள்ள பின்ஹோவில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது என போர்ச்சுக்கலின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் முந்தைய அதிகபட்ச வெப்ப நிலையான 1995 -ஆம் ஆண்டு அமரிலிஜாவில் ஏற்பட்ட 46. 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை முறியடித்திருக்கிறது.

இந்த அதீத வெப்ப நிலை குறித்து வானியல் நிபுணரான டைய்லர் ராய்ஸ் கூறும்போது, “2003-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகினர். ஐரோப்பா 1757-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது” என்றார்.

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் தொடர்ந்து கடும் தீவிர இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. எனவே, இவற்றை உணர்ந்து பூமி வெப்பமாதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை உலகத் தலைவர்கள் உடனடியாக எடுக்குமாறு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்துயுள்ளனர்.

Exit mobile version