மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த 57 இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 6 இடங்களில், 4 இடங்கள் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளன. இதில் திமுகவின் 3 இடங்களுக்கான வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடத்தை காங்கிரஸுக்கு திமுக வழங்கியுள்ளது. ஒரு இடத்துக்கான வேட்பாளரை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
அதேநேரம், அதிமுக தனது இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபட்டன. அதேநேரம், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் அல்லது சசிகாந்த் செந்தில் பெயர் பரிசீலனையில் உள்ளது என்றும் பேசப்படுகிறது.