கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.ரத்தினம் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவி தற்கொலை தான் செய்துகொண்டார் என்ற தனி நீதிபதி கருத்தும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கடிதம் குறித்து பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தங்கள் கோரிக்கை மனுவை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ளதாக உள்ளன.அவற்றை எல்லாம் வழக்காக விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யும் கோரிக்கையை தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். இந்த கோரிக்கை மனுவை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.