இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி.செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி.செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களையும், ட்விட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.