உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நான்கு வழி விரைவுச்சாலை மழைக்கு தாங்காமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி, மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35-ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா,மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஔரையா மற்றும் எட்டாவா ஆகிய 8 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையுடன் இணைகிறது.
இந்தச் சாலையை அண்மையில் தான் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்நிலையில், உ.பி.யில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் புதிய விரைவுச் சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
இது குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி, “ரூ.15,000 செலவில் கட்டப்பட்ட விரைவுச் சாலை 5 நாள் மழைக்குக் கூட தாங்காது என்றால், அதன் தரத்தைப் பற்றிய கவலைக்குரிய கேள்விகள் எழுகின்றன. இந்த திட்டத்தின் தலைவர், பொறியாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார்.