திமுக அரசில் 2 துறைகளின் ஊழல் ஆதாரங்கள் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் வீடற்ற ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6.29 கோடி வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். கடந்த 2014-ம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2ஜிகாவாட்டாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 53 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் உலகிலேயே 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.
ஆதார், ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை39 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட கருத்து
தமிழகத்தில் பாஜகதான் பிரதான எதிர்க்கட்சிபோல சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. தங்கள் கட்சிதான் நம்பர் ஒன் கட்சியாக இருக்கவேண்டும் என்பது அனைத்து தலைவர்களின் லட்சியமாக இருக்கும். அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஒரு கட்சித் தலைவராக எனது இலக்கும் அதுதான். தமிழகத்தில் பாஜகவை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டுவரவே நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும், தமிழகத்தில் குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழகம் இதுவரை காணாத ஊழலை இனி வரும் 2 ஆண்டுகளில் காணப்போகிறது. திமுக அரசின் 2 துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4-ம் தேதியில் வெளியிட உள்ளோம். அதைத் தொடர்ந்து வரிசையாக ஆதாரங்கள் வெளியிடப்படும்.
இலவச தொலைபேசி எண்
ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது. திமுக தலைமையிலான அரசு தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக செய்யும் ஊழலால் பாதிக்கப்படுபவர்களிடமிருந்து எங்களுக்கு தினமும் பல கடிதங்கள் வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்றே, கட்டணமற்ற தொலைபேசி எண்ணை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.