கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமமைடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா அளித்த பேட்டியில், “சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், செயற்பாட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்தார். அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவ ஆலோசனையின்படி அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமமைடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பதிவில், ” கரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வேண்டும். தொற்றுநோய் இன்னும் நீங்காததால், பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.