Site icon ழகரம்

கொள்கை பிரகடனம் குறித்து காங்கிரஸ் கட்சி பயிற்சி முகாம்: மாமல்லபுரத்தில் கே.எஸ்.அழகிரி தொடங்கிவைத்தார்

 

மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் பயிற்சி முகாமை மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்காக உதய்ப்பூரில் சிறப்பு சிந்தனை அமர்வுக் கூட்டம்சோனியா காந்தி தலைமையில் அண்மையில்நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கைப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இதனை நாடுமுழுவதும் கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கும் வகையில் பயிற்சி முகாம் நடத்த கட்சி மேலிடம் உத்தரவிட்டது.

இதன்படி மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்று பயிற்சி முகாம் தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்கினர். முன்னாள் தமிழகத் தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சுதர்சன நாச்சியப்பன், எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, விஜயதாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் அழகிரி, “கர்நாடக அரசின் மேகதாது ஆணை விவகாரத்தில் வரைவு அறிக்கைக்கு பாஜக ஒப்புதல் அளித்து தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது. காவிரி ஆறு எந்த எந்த மாநிலத்தில் ஓடுகிறதோ அந்த மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இதுகுறித்து விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைகாட்சி விவாதத்தின்போது ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இவர்களால் தான் உலகப் போர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.

Exit mobile version