Site icon ழகரம்

கோபமாக வெளியேறிய ஜோதிமணி…..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கூட்டணி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் திருப்தி அடையாததால், திமுக நிர்வாகிகளுக்கும், ஜோதிமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஜோதிமணி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ​​திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஜோதிமணி தொடர்ந்து வாதிட்டதால், அரவக்குறிச்சி திமுக ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன் குறுக்கிட்டு, ஜோதிமணியை தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றும், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறினார். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி தன்னை மண்டபத்தைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறி உடனடியாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்பாலாஜி, ‘நடந்த சம்பவங்களுக்குள் போகவேண்டாம் , நானும் அது சம்பந்தமாக பேச விரும்பவில்லை. இன்றைய நாளை பொறுத்தவரை தேர்தலுக்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துக்களை சொல்லி அதற்கான சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் வேற மாதிரி நிகழ்வுகளை உருவாக்குவதற்கு நான் விரும்பவில்லை” என்றார்.

Exit mobile version