Site icon ழகரம்

முன் எப்போதும் இல்லாத வகையில் சவால்களை எதிர்கொள்ளும் காங்கிரஸ் – எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி உருக்கம்

முன் எப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என எம்.பி.க்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இரு அவைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் நீங்கள் எப்படி வருத்தம் அடைந்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

அந்த முடிவுகள்நமக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக இருந்தது. இதையடுத்து, நமது செயல்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்வதற்காக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நமது கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்எப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, நாம் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மனஉறுதியுடனும் செயல்பட வேண்டும். மிகப்பெரிய நமது அமைப்பில் அனைத்து நிலையில் உள்ளநிர்வாகிகளும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நானும் தயாராக உள்ளேன். நம்முடைய கட்சி புத்துயிர் பெறுவது நமக்கு மட்டும் முக்கியம் அல்ல, நமது ஜனநாயகத்துக்கும் சமுதாயத்துக்கும் அவசியமாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிரிவினை அரசியலில் ஈடுபடுகிறது. நாட்டு மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க முயற்சிக்கிறது. பல நூற்றாண்டாக வேற்றுமையில் ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் நமது பாரம்பரியத்தை சீர்குலைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version