மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கைவாக்கெடுப்பு நடக்கிறது. இதுதொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின.
மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணிஇணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர்உத்தரவிட்டார். அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்றுதொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் சுமார் 50 பேர் கோவாவில் இருந்துமும்பைக்கு சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலைஅழைத்து வரப்பட்டனர். இவர்களை அழைத்து வர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோவா சென்றிருந்தார்.
சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதும் பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் கிடைத்தன.ராகுல் நர்வேகர் (45) மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மிக இளமையான தலைவர் என துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இவரது மாமனார் ராம்ராஜே நாயக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மேலவை தலைவராக உள்ளார். சமாஜ்வாடியின் 2 எம்எல்ஏக்களும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.