செய்திகள்இந்தியாதமிழ்நாடு

போட்டி அரசு நடத்துகிறார் தமிழிசை; நிரந்தர ஆளுநர் நியமிக்கக்கோரி போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

தமிழிசை போட்டி அரசை நடத்துவதால் பொறுப்பு ஆளுநருக்கு பதிலாக நிரந்தர ஆளுநரை நியமிக்கக்கோரி வரும் 16-ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலர் சலீம் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது: புதுச்சேரிக்கு பொறுப்பு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டு ஓராண்டை தாண்டியுள்ளது. இதுவரை புதுச்சேரியில் பொறுப்பு ஆளுநர்கள் இவ்வளவு மாதங்கள் இருந்ததில்லை. தெலங்கானாவில் இருப்பதைவிட புதுச்சேரியில்தான் அதிகமாக தமிழிசை இருக்கிறார். புதுவை அரசை அவர் செயல்பட விடவில்லை. ஆளுநராக கிரண்பேடி இருந்ததைப்போல் முழு அதிகாரத்தையும் தமிழிசையே எடுத்துக் கொண்டுள்ளார்.

தற்போது பிரதமரையும், நிதி அமைச்சரையும் தமிழிசை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இதர யூனியன் பிரதேசங்களைப் போல் மத்திய அரசின் மானியத்தை 100 சதவீதமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்போது 100 சதவீத மானியம் கோரினால் அந்தமான், லடாக் போல புதுவையையும் ஒரு கவுன்சில் போல மாற்ற மத்திய அரசு திட்டமிடுகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. சட்டப்பேரவை இல்லாத புதுச்சேரியாக மாற்றி அந்தஸ்ததை குறைக்கும் நடவடிக்கையாகும். போட்டி அரசை நடத்தி முதல்வர் ரங்கசாமியை செயல்படவிடாமல் ஒதுக்கும் போக்காகும்.

உண்மையில் முதல்வர் ரங்கசாமியை பாஜக ஓரம் கட்டுகிறது. அதேபோல் பாஜகவுக்கு ஆதரவாக தனது மாண்பை மீறி பேரவைத் தலைவரும் செயல்படுகிறார். புதுச்சேரிக்கென ஆளுநரை நியமிக்கக்கோரி வரும் 16ல் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதுச்சேரி நகராட்சி சார்பில் 55 இடங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் மற்றும் மார்க்கெட்டுகளில் அடிகாசு வசூலிக்க டெண்டர் விடுவதாக ஏற்கனவே கூறியிருந்தார்கள். இந்த டெண்டர் அரசு இணையத்தில் நடக்கவில்லை. அதற்கு பதிலாக தனியார் இணையத்தில் நடந்தது. அரசு நிர்ணயித்த டெண்டர் தொகையை குறைத்து டெண்டர் விட்டதால் அரசுக்கு ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும். முதல்வர் இதில் தலையிட்டு இந்த டெண்டர்களை ரத்து செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button