அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், “கடந்த 2016 ஆம் ஆண்டு பாலாஜி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 2018 ம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். குடும்பக் கட்டுப்பாடு செய்த பின்பும் நான் கர்ப்பமானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பாடி மருத்துவமனைக்கு சென்று கேட்டதில் அங்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை
கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டபோது அது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக 30 ஆயிரம் ரூபாய் தருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேறு வழி இல்லாமல் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டேன். குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தார்,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவ துறை அதிகாரி உள்ளிட்டவருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடியும் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.நித்தியா, இதேபோல நடந்த சம்பவத்திற்கு ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் சுமார் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திகு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அரசாணையை தாக்கல் செய்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டார்.