செய்திகள்உலகம்

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு,இந்திய தூதரகம் அறிவுரை

உக்ரைனில் உள்ள இந்தியர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதல் 3வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யா  ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள ராணுவ தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், ராணுவத் தளத்தை ரஷ்யப் படைகள் நெருங்கவிடமாட்டோம் என்று உக்ரைன் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இந்தியர்கள் சிலரை மீட்க இன்று முதற்கட்டமாக ஏர் இந்தியா விமானம் போலந்து செல்கிறது.

ஆனால், உக்ரைனின் கீவ், கார்கிவ், லிவ், டெர்னோபில் எனப் பல பகுதிகளிலும் இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். ஏறத்தாழ 20000 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முன்னதாக நேற்று உக்ரைனின் எல்லைகள் வழியாக அண்டை நாடான போலந்து, ருமேனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை வந்தடையுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு வரும்போது இந்தியர்கள் தங்களின் கார்களில், கைகளில் இந்திய தேசியக் கொடியைக் கொண்டு வரவும் என்று வலியுறுத்தியிருந்தது.

ஆனால், பிப்.26 தேதியிட்டு வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில், உக்ரைனை ஒட்டிய பல்வேறு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றும் வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற நாடுகளின் எல்லை வரை இந்தியர்களை பத்திரமாகக் கொண்டு செல்வதில் புதிதாக பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஆகையால் தூதரக அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டுதல்கள் வராமல் எக்காரணம் கொண்டும் எல்லை நோக்கிய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

இப்போதைக்கு இருக்கும் இடத்திலேயே இருப்பது பாதுகாப்பானது. உக்ரைனின் மேற்குப் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு, தண்ணீர் வசதியுடன் உறைவிடத்திலேயே இருப்பது மிகவும் பாதுகாப்பானது. எல்லை செக் பாயின்ட்டுகளை இந்தச் சூழலில் அடைய முயற்சி செய்ய வேண்டாம்.

உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்தியர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவும். அமைதி காக்கவும். கையில் இருக்கும் உணவு, தண்ணீரைக் கொண்டு நிலைமையை சமாளிக்கவும். தேவையற்று வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

இவ்வாறு புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button