பெண் பணியாளர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள புதிய முயற்சியாக 2 பணியாளர்களையும், அலுவலகத்தில் தனி அறையையும் ஏற்படுத்தியுள்ளது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்.
பணிக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் ஒன்று குழந்தை பராமரிப்பு. இதனால்தான் வெளி நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் பணியாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்க தனி பணியாளர்கள் இருப்பார்கள். மேலும் குழந்தைகளுக்கு என்று அலுவலகங்களிலேயே தனி அறையும் இருக்கும். பெண் பணியாளர்கள் தங்களின் குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வந்து இந்த அறையில் விட்டு தங்களின் பணியை மேற்கொள்ளலாம்.
இது போன்ற ஒரு புதிய முறையை முதல் முறையாக தனது அலுவலகத்தில் செயல்படுத்தியுள்ளது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம். அங்கு பணியாற்றும் மொத்த பணியாளர்களின் 50 சதவீதம் பேர் பெண் பணியாளர்கள் ஆவர். எனவே பெண்களுக்கு ஏற்ற பணியிடங்களை உருவாக்கும் வகையில் இந்த முயற்சியை எடுத்துள்ளது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல் அலுவலகமாக சிஎம்டிஏ இதை செயல்படுத்தியுள்ளது. 2007 மகப்பேறு பயன் சட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட தங்களின் குழந்தைகளை பெண் பணியாளர்கள் இந்த மையத்தில் விட்டுச் செல்லாம். இந்த குழந்தைகளை பராமரிக்க 2 பணியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இந்த அறை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் பொம்மைகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கு ஏற்ற நாற்காலிகள், குழுந்தைகள் தூங்குவதற்கான பாய்கள், பாலுட்டும் அறை என்று குழந்தைகளின் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்று பணியாளர்களுக்கு ஏற்ற அலுவலத்தை உருவாக்கும் முயற்சி தொடரும் என்று சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.