மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் அறிவிப்பு: கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் விஜயேந்திர பிரசாத், கொடையாளரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோரை நியமன எம்.பி.க்களாக நியமித்து மத்திய அரசு நேற்று (ஜூலை 6) அறிவித்தது.
தமிழ் சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார் இளையராஜா. 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனையாளர். தன் கடின உழைப்பால் கலையுலகில் உச்சம்தொட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரால் இசைஞானி என்று போற்றப்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயா @ilaiyaraajaஅவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.