கரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துவிட்டதை அடுத்து அவர் இன்று காலை 9.45 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின் இன்னும் ஒரு வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டுமென்று மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவமனையிலிருந்து நேரடியாக தலைமைச் செயலகம் வந்துள்ள அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்கு மேல் வாக்களிப்பார் எனத் தெரிகிறது.
அனுமதி முதல் டிஸ்சார்ஜ் வரை: முன்னதாக கடந்த கடந்த ஜூலை 11-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில், நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை – தெற்கு டி.எல்.எப். ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டர். பின்னர் ஜூலை 14 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருடைய உடல்நிலை தேறியதை அடுத்து இன்று (ஜூலை 18) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.