சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாரச்சந்தையை திறந்து வைத்து ஒரு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. நகரில் ஓராண்டாக சந்தை இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வந்தது. அங்குள்ள கடைகள் சேதமடைந்ததை அடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மூலதன மானிய நிதி திட்டம் ரூ.2 கோடியில் வாரச்சந்தை சீரமைக்கப்பட்டது. மொத்தம் 120 கடைகள் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிக்காக ஓராண்டுக்கு முன்பு, வாரச்சந்தை நகருக்கு வெளியே மதுரை சாலைக்கு மாற்றப்பட்டது.
தூரம் அதிகமாக இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து வியாபாரிகளும் கடைகள் அமைப்பதை கைவிட்டனர். இதனால் ஓராண்டாக வாரச்சந்தை இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 8-ம் தேதி சீரமைக்கப்பட்ட வாரச்சந்தை கட்டிடத்தை, சிங்கம்புணரி சமத்துவபுரம் திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பிறகு, ஒரு மாதமாகியும் வாரச்சந்தை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த மாதம் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘120 கடைகளுக்கும் கட்டணம் வசூலிக்க ரூ.6.87 லட்சத்துக்கு ஏலம் விட்டுவிட்டோம். ஜூலை 2-ம் தேதி முதல் வாரச்சந்தை பயன்பாட்டுக்கு வரும்’ என உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போதுவரை வாரச்சந்தையை திறக்கவில்லை. வாரச்சந்தை புதிய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.