சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் உயிர்பன்மை, பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் கேரள மாநிலம் வயநாட்டில் வரும் 5, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மதுரா சுவாமிநாதன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதனால் கடல் மட்டம் உயர்தல், வேளாண் தொழில் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக நாட்டின் உயிர்பன்மை பாதிப்புக்குள்ளாகும். இதைக் கருத்தில் கொண்டே, உயிர்பன்மை சூழல் செறிந்துள்ள கேரள மாநிலம் வயநாட்டில் இந்த அறக்கட்டளை சார்பில் ‘சமூக வேளாண் உயிர்பன்மை மையம்’ தொடங்கப்பட்டது.
இதன் 25-ம் ஆண்டு விழா மற்றும் உயிர்பன்மை, பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் வயநாட்டில் ஜூன் 5, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில், ‘உயிர்பன்மை, பருவநிலை மாற்றம் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த் பட்வர்தன், இந்தியாவுக்கான ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்திபிரிவு தலைவர் ஆஷிஸ் சதுர்வேதி, தென்னாப்பிரிக்க வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை இயக்குநர் இட்செல் குய்னே, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி பிரிவு ஆலோசகர் ஸ்ரீஜா ஜெய்ஸ்வால் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன், அறக்கட்டளையின் பருவநிலை மாற்றப் பிரிவு முதுநிலை ஆராய்ச்சியாளர் ஜெயராமன், வயநாட்டில் உள்ள சமூக வேளாண் உயிர்பன்மை மைய இயக்குநர் வி.சகீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.