இந்தியா – சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த 2017-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பினர் இடையே சமரசம்ஏற்பட்டு பின்வாங்கினர்.
இந்நிலையில் இந்த இடத்தில் இருந்து 9 கி.மீ தூரம் கிழக்கே ஒரு கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. இது பூட்டான் எல்லைக்குள், அமோ சூ ஆற்றங்கரையையொட்டி உள்ளது. இதற்கு பாங்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டின் முன்பு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு 2வது கிராமம் முடிவடையும் நிலையில் உள்ளது. 3வது கிராமம் உருவாக்க அமோ சூ ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்றும் கட்டப்படுகிறது. 3-வது கிராமத்தில் 6 கட்டிடங்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் புதிய செயற்கைகோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அமோ சூ ஆற்றங்கரையில் கட்டிடங்களை கட்டினால், அருகில் டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீன படையினர் எளிதில் வர முடியும். மேலும் இங்கிருந்து இந்தியாவின் சிலிகுரியைபகுதியை நேரடியாக பார்க்க முடியும். இந்த இடம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “டோக்லாம் அருகே நடைபெறும் செயல்பாடுகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்றார்.