Site icon ழகரம்

தென்மேற்குப் பருவமழை சவால்களை எதிர்கொள்ள அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைச் செயலர் அறிவுரை

தென்மேற்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசியதாவது:

பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி மற்றும் குளங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். வடிகால்கள் மற்றும் ஏரி, குளங்களை தூர்வார, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தயாரிக்க வேண்டும். வெள்ள அபாயத்தின்போது அனைத்துத் துறைகளும் உபரி நீரை வெளியேற்றும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேநேரம், ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாக நீரைத்தேக்கிவைக்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்கி, வெள்ள அபாயத்தைத் தடுக்க வேண்டும்.

வெள்ளத்தின்போது பாதிக்கப்படும் அனைவருக்கும் போதுமான உணவுப் பொட்டலங்கள், தடையின்றி வழங்குவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் நிவாரண மையங்களை தயார்நிலையில் வைக்க வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி, வரும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர் சவால்களை திறம்பட எதிர்கொள்ள, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தலைமைச் செயலர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் செயலர்கள், ராணுவம், விமானப் படை, கப்பல் படை,கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்புப் படை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version