
தமிழகத்தில் கரோனா தடுப்பூசிபோடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், ஆசிய, ஐரோப்பியநாடுகளில் தற்போது கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
‘தமிழகத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சிஅமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்’ என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் விவரம்:
* நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி போடாத50 லட்சம் பேர் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய 1.32 கோடிபேரை கண்டறிந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மெகா முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் மற்றும் 2-ம் தவணை, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது கவனம் செலுத்தி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலர்ஜெ. ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, சுகாதாரத் துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில் குமார், பொதுத்துறை செயலர் ஜகந்நாதன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.