நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலின் இரண்டாவது பத்தியில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துலு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை குறிப்பிடும் வரிகளை நீக்கி, கடந்த 1970ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார். அதன்படி, அப்போது முதல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது.
அதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார். திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து 1970ல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.