திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் நேற்று முன் தினம் தாக்கியுள்ளனர். சாலை பணிகளை அமைக்க வந்த 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 தெருக்களில் மட்டும் ரூ. 30 லட்சம் செலவில் பணி நடந்து வருகிறது. இதற்காக 13 லாரிகளில் சாலைகளில் கொட்டுவதற்காக ஜல்லி கலவை கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ இப்படி அடாவடி செயல்களில் ஈடுபடுலாமா? மக்கள் பிரதிநிதியே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்ககோரி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.