சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்வரும் 9-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அன்று காலை 10 மணிக்கு மாமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடி, தொழில் வரி மூலம் ரூ.350 கோடி வருமானம் கிடைக்கிறது. மேலும், இதர வரிகள் வாயிலாக ரூ.1,600 கோடி என ஆண்டுக்கு மொத்தம் ரூ.2,650 கோடி வரி வசூலாகி வருகிறது.
இந்த வருவாயைப் பயன்படுத்தி மாநகராட்சியில் பணியாற்றும் 23,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ரூ.1,300 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் நிர்வாகப் பணிகளுக்கு ரூ.40 கோடி செலவிடப்படுகிறது. இதர வருவாய் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதிகளில் இருந்தும், உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளிடமிருந்தும் பெறப்படும் கடன்கள் வாயிலாகவும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது மாநகராட்சியின் நிகர கடன் ரூ.800 கோடிக்கு மேல் உள்ளது. இதற்காக ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது. இந்நிலையில், சென்னைமாநகராட்சியில் உயர்த்தப்பட்டுஉள்ள புதிய சொத்து வரியால் கூடுதலாக பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த சூழலில், சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா,துணை மேயராக மு.மகேஷ்குமார் ஆகியோர் கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மண்டலக் குழுத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர்கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்அனைவரும் பொறுப்பேற்றதைஅடுத்து, பட்ஜெட் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான மாமன்றக் கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு கூட்டப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அன்று 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் 2022-23-ம்ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஏறத்தாழ6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைமாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.