Site icon ழகரம்

வரி தொடர்பாக பரிந்துரை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் செய்ய முடியும் – மாநில அரசுகளும் சட்டம் இயற்றலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்புக்கான சட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்ச நீதின்றம் நேற்று அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை நேற்று அளித்தது. அதில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, ஜிஎஸ்டி விதிகளை உருவாக்குவதில் மாநில அரசுகளுக்கும் பங்குள்ளது. அதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய, மாநில அரசுகள் ஏற்கும் வகையிலான தீர்வை காணவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மொகித் மினரல் தொடர்ந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. உயர் நீதிமன்ற தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்தை பாதிப்பதாக உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடல் மார்க்கமாக கொண்டு வரும் சரக்குகளுக்கு ஐஜிஎஸ்டி விதிப்பதை ரத்து செய்வது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

கடல் மார்க்கமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது ஐஜிஎஸ்டி விதிப்பது என்பதை விட ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு ஐஜிஎஸ்டி விதிப்பதை ஏற்க முடியும் என்றும், எப்போதுமே இத்தகைய வரி விதிப்பில் மத்திய அரசுக்கு அதிக பங்கு சேரும் என்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆகியவை சம அதிகாரம் பொருந்தியவை. இவை இரண்டும் சேர்ந்து உருவாக்கியதுதான் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை. இதற்கு உரிய பரிந்துரைகளை அளிப்பது மட்டும்தான் ஜிஎஸ்டி கவுன்சிலின் வேலை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடல் மார்க்கமாக பொருள்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசும், பல்வேறு இறக்குமதியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை போட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் முரண்பாடுகள் இருப்பதோடு அது கூட்டாட்சி தத்துவத்தை பாதிப்பதாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஜிஎஸ்டி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உருவான ஜிஎஸ்டி கவுன்சில் இரு தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி கவுன்சிலானது வரி விதிப்புக்கான பரிந்துரைகளை அளிக்க ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version