செய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1-ம் தேதி துவங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1- ஆம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதை ஏற்று தமிழகத்தில் செப்.1ம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முதல்வர் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் நாளன்றே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார்.

தண்ணீர் திறந்த விட்டதோடு நில்லாமல் குறுவை நெல் சாகுபடியும் அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிடும் என்பதால் 2022 – 23 ஆம் காரிஃப் சந்தைப் பருவக் கொள்முதலை 1.10.2022 அன்று தொடங்குவதற்குப் பதிலாக 1.9.2022 அன்றே ஆரம்பித்திடவும் அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 2022 – 23 ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து பிரதமர் கடிதம் எழுதினார்.

மேலும், முதலமைச்சரின் ஆணைக்கினங்க, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பியுஸ் கோயலை நானும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளரும் கோயம்புத்தூரில் நேரில் சந்தித்து முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடித நகலைக் கொடுத்து 1.09.2022 அன்று நெல் கொள்முதலைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

புதுதில்லியில் 05.07.2022 நடந்த மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டின் போதும் மத்திய அமைச்சரிடம் இது பற்றி நானும், துறையின் முதன்மைச் செயலரும் நினைவூட்டினோம்.

மேலும், குறுவைப் பருவ நெல் கொள்முதல் தொடர்பாக காவிரிப்பாசன மாவட்ட விவசாயிகளின் ஆலோசனைகனளக் கேட்டிடவும் நெல் கொள்முதலுக்கான ஆயத்தப்பணிகளை உடனே மேற்கொண்டிடவும் முதலமைச்சர் ஆணையிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 12.07.2022 மற்றும் 13.07.2022 ஆகிய இரு நாள்களில் மக்கள் பிரதிநிதிகளையும் விவசாயிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆலோசித்ததோடு தொடர்புடைய அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினோம்.

அதனடிப்படையில் நெல் கொள்முதலுக்குத் தேவையான பணியாளர்கள் தேர்வு, கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்புக்கான இடங்கள், கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றிற்கான திட்டமிடல் தொடர்பான அறிவுரைகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக 1.09.2022 அன்றே தொடங்கி நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கிய மத்திய அரசின் கடிதம் நேற்று (19.07.2022) கிடைக்கப்பெற்றது.

இதனால் 1.09.2022 அன்றிலிருந்தே நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளைத் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால், 1.09.2022 அன்று முதல் கொள்முதல் செய்யப்படும் பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 2115 ரூபாயும், சன்ன ரகத்திற்கு 2160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button