சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சார்பு ஆய்வாளர் ரகுகணேஷூக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உட்பட 9 போலீஸார் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரகுகணேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நான் உட்பட 9 பேரும் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறையில் இருந்து வருகிறோம். 20 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளோம். இந்த வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசம் வழங்கி ஒரு ஆண்டு முடிந்துவிட்டது.
இதுவரை மொத்த சாட்சிகள் 105 பேரில் 22 பேரை மட்டுமே விசாரித்துள்ளனர். விசாரணை முடியும் வரை சிறையில் அடைப்பது சட்டவிரோதம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என ரகுகணேஷ் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே. முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மனைவி சார்பில், ஜாமீன் வழக்கில் தன்னையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி கோரினார். சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் மனுதாரர் ரகுகணேஷிற்கு தொடர்புள்ளது. கடந்த முறையும் இதே கோரிக்கையை முன்வைத்தே ஜாமின் கோரினார்.
உயர் நீதிமன்ற உத்தரவால் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், ஜெயராஜ் மனைவி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப். 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.