சென்னையில் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கையெழுத்து முகாமில், தலைக்கவசம் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனர்.
அத்துடன், காவல் ஆணையர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி, இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து 5 நாட்கள், 5 முக்கிய சிக்னல் சந்திப்புகளில் நடத்தப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 23.05.2022 முதல் 05.07.2022 வரையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 72,744 பேர் மீதும், பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 நபர்கள் மீதும் என மொத்தம் 1,36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் 1,36,65,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.