தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது .
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் இறுதி நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் 6 பேர் மீது தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புமணி ராமதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், ‘இறுதி நாள் பிரச்சார ஊர்வலத்தில் நான் பங்கேற்கவில்லை. வழக்கிற்கும் எனக்கும் தொடர்பில்லை. எனவே என் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.