செய்திகள்தமிழ்நாடு

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளவைத்தது.

கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனிதனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம். மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது” என உத்தரவிட்டனர்.

ஆனால், நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டும் எனக் கோரி, சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

மேலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது. எனவே ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், “ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 வரைவு தீர்மானங்களை நிராகரித்து விட்டு தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்து, அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11-ம் தேதி கூட்டுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றியது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்” என வாதிட்டார்.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் , “இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நலனுக்கு எதிராக கட்சி விதிகளில் திருத்தம் வரலாம் என்ற எண்ணத்திலேயே ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “தற்காலிக அவைத் தலைவராக மட்டுமே தமிழ் மகன் உசேன் , ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் ஏற்கெனவே நியமிக்கப்பட்டார். சிறப்பு தீர்மானத்தின் மூலம் அவரை நிரந்தர அவைத்தலைவராக நியமித்தது தவறு. அவரை நிரந்தர அவைத்தலைவராக நியமிக்க எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்ததும், அதை ஜெயக்குமார் வழிமொழிந்ததும் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்” எனவும் வாதிட்டார்.

விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை எழுப்ப முடியாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன்பின்னர் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல என்று விளக்கம் அளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்பட்டுவிட்டாலோ, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலோ இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை நீதிமன்றம் தலையிட முடியாது. ஜூன் 23-ம் தேதி நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button