“கம்போடியாவில் வேலை சீனர்கள் பச்சை மாமிசம், கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்!” தமிழக இளைஞர் பகீர் புகார்!
Editor Zhagaram
“கம்போடியாவில் வேலை சீனர்கள் பச்சை மாமிசம், கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்!” தமிழக இளைஞர் பகீர் புகார்!
இளைஞர் நீதிராஜன், கம்போடியா நாட்டுக்கு டேட்டா என்ட்ரி வேலை என அழைத்துச் செல்லப்பட்டு, சட்டவிரோத பணிகளில் ஈடுபடும் சீனா நாட்டு கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, பிரபகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிராஜன். இவர் கம்போடியா நாட்டுக்கு டேட்டா என்ட்ரி வேலை என அழைத்துச் செல்லப்பட்டு, சட்டவிரோத பணிகளில் ஈடுபடும் சீனா நாட்டு கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீதிராஜன், தன்னை ஏமாற்றிய மஹதீர் முகமது, அவருடைய தாய் சையது ரூஹானி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தார்.
இது குறித்து நீதிராஜன் கூறியது “நான் டிப்ளமோ முடித்து வெளியூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கொரோனா காரணமாக வேலையின்றி இருந்தேன். அப்போது என்னுடன் பள்ளியில் படித்த மஹதீர் முகமது என்பவரின் தாய் சையது ரூஹானியை எதேச்சையாகச் சந்தித்தேன்.
அவர் மஹதீர் முகமது கம்போடியா நாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்கும் ஏஜென்ட்டாகவும் இருந்து வருவதாகவும் கூறினார். மேலும், `பாஸ்போர்ட், டிக்கெட் செலவுக்கான பணம் ரூ.2.50 லட்சத்தைக் கட்டினால்போதும், கம்போடியா நாட்டில் என் மகன் வேலை வாங்கித் தருவான். ஏற்கெனவே உங்களுடன் படித்த அசோக் மணிகுமார் ரூ.2.50 லட்சம் பணம் கட்டிவிட்டார். அவருக்கு விசா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அதனுடன் சேர்த்து நீயும் பணம் கட்டினால் உனக்கும் விசா ஏற்பாடு செய்து, இருவரும் சேர்ந்து கம்போடியா நாட்டுக்கு வேலைக்குச் செல்லலாம்’ என ஆசையைத் தூண்டினார்.
பின்னர் அவருடைய மகன் மஹதீர் முகமது என்னிடம் செல்போனில் பேசி எந்த பிரச்னையும் இல்லை. வேலை தயார் நிலையில் இருக்கிறது. தைரியமாக வரலாம் என நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பேசினார். அவர்கள் பேச்சை நம்பி கடன் வாங்கி ரூ.2.50 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன்.
இதையடுத்து எனக்கும், அசோக் மணிகுமாருக்கும் சுற்றுலா விசா கொடுத்தனர். இது குறித்து மஹதீர் முகமதுவிடம் கேட்டபோது, கம்போடியா நாட்டுக்கு சென்ற பிறகு கம்பெனி விசா வழங்கப்படும் எனக் கூறினார். அதன்படி கடந்த ஜூன் மாதம் நாங்கள் இருவரும் கம்போடியா நாட்டுக்குச் சென்றோம்.
அங்கு விமான நிலையத்தில் எங்களைச் சந்தித்த மஹதீர் முகமது, எங்களிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, ஒரு காரில் வந்த சீனர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் எங்களை ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடத்துக்கு அழைத்துச் சென்று, `இங்குதான் உங்களுக்கு வேலை’ எனக் கூறினர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் தமிழர்களாகவே இருந்தனர். யாரிடமும் பேசக்கூடாது என எங்களுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் செல்போன் நம்பர்கள் சிலவற்றை கொடுத்து, அந்த நம்பர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி ஏமாற்றி பணம் பறிக்க வேண்டும் எனக் கூறினர். நாங்கள் அந்த வேலைகளைச் செய்ய மாட்டோம் எனக் கூறியபோது, உங்களை ரூ.2.50 லட்சம் விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம். கொடுத்த வேலையை செய்யவில்லை என்றால் சுட்டுக் கொலைசெய்து விடுவோம் என மிரட்டினர்.
மாதம் இவ்வளவு பேரை ஏமாற்றி, இத்தனை கோடி டார்கெட்டை முடித்தால்தான் சம்பளம் எனவும் கூறினர்.
ஆனால் எங்களுக்கு யாரையும் ஏமாற்ற மனது வரவில்லை. ஏமாறுபவர்களையும் போலி நிறுவனம் என எச்சரித்தோம். இதனைத் தெரிந்து கொண்ட சீனர்கள், எங்களுக்கு சாப்பாடு கொடுக்கவில்லை. பசி எனக் கேட்டால் பச்சை கறியைக் கொடுத்து சாப்பிடும்படி வற்புறுத்தினர். சாப்பிட மறுத்த எங்களை கரன்ட் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தினர்.
நாங்கள் சொந்த நாட்டுக்குச் செல்கிறோம் எங்கள் பாஸ்போர்ட்டை கொடுக்கும்படி மஹதீர் முகமதிடம் கேட்டோம். அப்போது, `பாஸ்போர்ட்டை தரமுடியாது, சீனர்களிடம் சொல்லி உங்களை கொலைசெய்து விடுவேன்!’ என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கம்போடியா நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும், என் பெற்றோர்களுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அவர்கள் எடுத்த முயற்சியால் நாங்கள் அந்த கம்பெனியிலிருந்து மீட்டு கொண்டுவரப்பட்டோம்.
பின்னர் சட்டவிரோதமாகச் சுற்றுலா விசாவில் வந்து வேலை பார்த்ததாக கம்போடியா நாட்டு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டோம். அங்கு மூன்று மாதங்கள் சட்டவிரோதமாக தங்கியதாக கம்போடியா நாட்டு அரசு எங்களுக்கு அபராதம் விதித்தது. எங்கள் வீட்டிலிருந்து அபராதத் தொகை, கம்போடியாவிலிருந்து இந்தியா திரும்புவதற்கான சுற்றுலா விசா எடுப்பதற்கான பணம் ரூ.2.50 லட்சத்தை அனுப்பி வைத்தனர். இந்திய தூதரகம் உதவியுடன் மீண்டு இந்தியா வந்திருக்கிறோம்.
கம்போடியா நாட்டில் எங்களைப் போன்று 800-க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொண்டு சீனர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மிரட்டியும், கொடுமைப்படுத்தியும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். அவர்களை இந்திய அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும்.
எங்களைப் போன்று பலரை கம்போடியாவில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி சீனர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுவிட்டு, நாட்டுக்கு துரோகம் செய்து வரும் மஹதீர் முகமது அவர் தாய் சையது ரூஹானி ஆகியோரைக் கைதுசெய்து, அவர்கள் அனுப்பி வைத்த நபர்களை கணக்கெடுத்து மீண்டும் தமிழகம் மீட்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.