செய்திகள்தமிழ்நாடு

“சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா? – வானதி சீனிவாசன்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன். சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம். சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என பேசினார்.

இதற்கு ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா? என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன், இயக்குனர் வெற்றிமாறன் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார். உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன். ஆனால், அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்து மத கலாசாரம் மற்றும் அடையாளங்களை அழிக்க பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் வெற்றிமாறனின் பேச்சு என குற்றம்சாட்டி உள்ளார் . தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை எனவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button